தமிழக கல்லூரிகளில் மாணவர்களின் அட்மிஷனுக்கு டொனேஷன் வாங்குவது இனி நடக்காது; உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி..!
Collecting donations for student admissions in Tamil Nadu colleges will no longer take place Minister for Higher Education
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையில் மாணவர்களின் அட்மிஷனுக்கு டொனேஷன் வாங்குவது, கொடுப்பது இனி நடக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளமை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
கடந்த 1992 வருட தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் (நன்கொடை வசூல் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பதை முற்றிலுமாகத் தடை செய்கிறது.
அதாவது, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தப் பெயரில் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையும் 'நன்கொடை' என்றே சட்டப்பிரிவு 2(a)-ன்படி கருதப்படும். இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன்படி, எந்தவொரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகமோ அல்லது நிர்வாகத்தின் சார்பாக வேறு எந்த நபரோ மாணவர் சேர்க்கைக்காக நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும்.

குறிப்பாக, பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் கட்டண முறைகேடுகளைத் தடுக்க 2007-இல் இந்தச் சட்டத்தில் முக்கியத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதாவது, அரசால் நியமிக்கப்பட்ட ‘கட்டண நிர்ணயக் குழு’ (Committee on Fixation of Fee) நிர்ணயிக்கும் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரிகள் அதிகமாக வசூலிக்கக் கூடாது என் சட்டம் உள்ளது.
இந்த சட்டத்தின் பிரிவு 9-இன் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எந்த நேரத்திலும் ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்யலாம். அத்துடன், நன்கொடை வசூலிப்பது தொடர்பான சந்தேகம் இருந்தால், கல்லூரியின் கணக்குப் புத்தகங்கள், ரசீதுகள் மற்றும் ஆவணங்களை எந்த முன் அறிவிப்புமின்றிக் கைப்பற்ற அதிகாரிகளுக்கு முழு உரிமையும் உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாகவோ அல்லது நன்கொடையாகவோ மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அந்தச் சட்டவிரோதப் பணத்தை உடனடியாக மாணவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் எனச் சட்டத்தின் பிரிவு 12 அறிவுறுத்துகிறது.
அத்துடன், கட்டண விதியை மீறும் கல்லூரிகளின் ஏஐசிடிஇ (AICTE) அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு, பல்கலைக்கழக இணைப்பும் ரத்து செய்யப்படுவதோடு, கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
ஒரு கல்லூரி விதிமீறலில் ஈடுபட்டால், அந்த நிறுவனத்தின் இயக்குநர், மேலாளர் அல்லது அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மீதே நேரடியாக வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தரச் சட்டத்தில் வழியுள்ளது. அதேப்போன்று ஏதேனும் உயர்க்கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்தால், பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ நேரடியாகக் 'கட்டண நிர்ணயக் குழுவை' அணுகி புகார் அளிக்க முடியும்.
முன்னதாக, ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்திருந்த கட்டண முறையின்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களான Category - I பிரிவில் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு (Non-Accredited) ஆண்டுக்கு 50,000 ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு (Accredited) ஆண்டுக்கு 55,000 ரூபாயும் அதிகபட்ச கட்டணமாக அமலில் உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான Category - II பிரிவில் தரச்சான்று பெறாத படிப்புகளுக்கு ஆண்டுக்கு 85,000 ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளுக்கு ஆண்டுக்கு 87,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், போதிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள குறிப்பிட்ட சில 24 முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும் நிர்வாக ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக 1,20,000 ரூபாய் முதல் 1,25,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள இந்தக் குழு சிறப்பு அனுமதி அளித்திருந்தது.
கல்வி கட்டணம், ஆய்வகம், கம்ப்யூட்டர், நூலகம், விளையாட்டு, பராமரிப்பு என அனைத்தும் இந்த கட்டணத்தில் அடங்கி விடும். மேலும், கல்லூரிகள் ஒருமுறை மேம்பாட்டுக் கட்டணமாக ரூ. 5,000 மற்றும் திருப்பித் தரக்கூடிய காப்புத்தொகையாக (Caution Deposit) ரூ. 5,000 மட்டுமே வசூலிக்கலாம். வேறு எந்தப் பெயரிலும் கூடுதல் கட்டணமோ நன்கொடையோ வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும்.

அடுத்ததாக, டொனேஷன் வசூலிப்பதற்க எதிராக 35 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் இயற்றப்பட்டாலும், மாநிலத்தின் பல முன்னணி தனியார் கல்லூரிகளில் இன்றும் மறைமுகமாக லட்சக்கணக்கில் டொனேஷன் வாங்கப்படுவதாக பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
கடந்த காலங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளும் பெற்றோர்களிடமும், கல்வியலாளர்களிடமும் எழாமல் இல்லை. இவ்வாறு மறைமுகக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசு கடுமையான கண்காணிப்புக் குழுக்களை அடிப்படையில் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையில் மாணவர்களின் அட்மிஷனுக்கு டொனேஷன் வாங்குவது, கொடுப்பது இனி நடக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Collecting donations for student admissions in Tamil Nadu colleges will no longer take place Minister for Higher Education