‘உண்மை தெரிந்தும் சொல்லாமல் இருப்பது ஏன்?’ – இயக்குநர் ஹெச். வினோத் கருத்துக்கு அமீர் கேள்வி!
Why donot you tell the truth even though you know it Aamir questions director H Vinoth comment
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு இயக்குநர் அமீர் எதிர்வினையாற்றியுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் முதலில் பொங்கல் வெளியீடாக வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் படம் இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹெச். வினோத், படத்தின் தாமதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது நம் கையில் இல்லை. அதில் இருக்கும் உண்மைகளை எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை அந்த தைரியம் வந்தாலும், அதை வெளியிடும் தைரியம் உங்களுக்கு இருக்காது. படம் வரும்போது பார்ப்போம்” என்று பதிலளித்திருந்தார்.
இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:“ஹெச். வினோத் பேசியதை நான் வருத்தத்துடன் பார்க்கிறேன். இந்த சமூகத்தில் உங்களுக்கு நடந்த அநீதியைப் பற்றி கூட பேச தயங்கினால், பிறகு யார் பேசுவார்கள்? ஜன நாயகன் படத்தின் நாயகன் இன்று ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது படத்துக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டாமா?”
மேலும், படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தையும் அமீர் குறிப்பிட்டார்.“படம் சட்டவிரோதமாக வெளியானபோது, சில அரசியல் தலைவர்கள் இதற்கு காரணம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. உண்மை இருந்திருந்தால் அது நிரூபிக்கப்பட்டிருக்கும். எனக்கு தெரிந்தவரை அவை அரசியல் குற்றச்சாட்டுகளாகவே இருந்தன.”
பட வெளியீடு தாமதமாகும் விவகாரத்தில் யார் பொறுப்பு என்ற கேள்விக்கும் அமீர் பதில் தேடினார்.“படத்தை யார் தடுக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட தரப்பும் சொல்லவில்லை. தடுக்கிறார்கள் என்று கூறப்படுபவர்களும் விளக்கம் அளிக்கவில்லை. அப்படியானால் உண்மையை மக்கள் எப்படி தெரிந்து கொள்வார்கள்? ஒரு பிரச்சனை நடந்தால் அதை வெளிப்படையாக கூறினால்தான் மக்களுக்கு உண்மை புரியும்.”
இறுதியாக,“அதனால் இந்த விஷயத்தில் இயக்குநர் ஹெச். வினோத்தின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அமீர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜன நாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் வெளியீடு தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Why donot you tell the truth even though you know it Aamir questions director H Vinoth comment