திமுகவை கை கழுவும் மதிமுக? திமுக கூட்டணியில் தொடர்வதா? பொதுக்குழுவே முடிவு செய்யும்! உண்மையை உடைத்த துரை வைகோ! - Seithipunal
Seithipunal


திருச்சியில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பின்னர் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து கட்சியின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக முதல்வர் விஜய் திருச்சி சென்றிருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதில் திமுக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவும் கலந்து கொண்டு விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "துரதிர்ஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம். அதனால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. நாங்கள் தனி இயக்கம். திமுக கூட்டணியில் தொடர்வதா, வெளியேறுவதா என்பது குறித்து எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு செய்வோம்" என்றார்.

மேலும், முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக விரிவான அறிவிப்புகள் வரலாம். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆன நிலையில், உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல" என்றார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவர், "முந்தைய ஆட்சியிலும் அந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படவில்லை. நிதிநிலை மற்றும் நிர்வாக நடைமுறைகள் காரணமாக கால அவகாசம் தேவைப்பட்டது. அதேபோல் தற்போதைய அரசுக்கும் சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

அரசியல் நிலவரம் குறித்து பேசிய துரை வைகோ, "மக்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது அரசியலமைப்பு நடைமுறை. அந்த வகையில் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். புதிய அரசுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை செயல்பட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார்.

துரை வைகோவின் இந்த கருத்துகள், குறிப்பாக திமுக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, மதிமுகவின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

எனினும், மதிமுக தரப்பில் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவும் அறிவிக்கப்படவில்லை. எனவே துரை வைகோவின் கருத்து, கட்சிக்குள் நடைபெறவுள்ள ஆலோசனைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டத்தில் மதிமுக எடுக்கும் அரசியல் முடிவு, தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றக்கூடிய முக்கிய அம்சமாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will MDMK wash its hands of DMK Will it continue in the DMK alliance The general committee will decide Durai Vaiko broke the truth


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->