'புதுப் பாதையில் காத்திருந்த ஆபத்து'...! திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை...! - சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்...?
Danger waiting new path Youth hacked to death near Thiruppuvanam Who person whose body recovered
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யார்? அவரை கொடூரமாக வெட்டிக்கொன்றவர்கள் யார்? என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்புவனம் வட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொந்தகை கண்மாய் அமைந்துள்ளது.

அடர்ந்த கருவேல மரங்கள் சூழ்ந்த இந்தப் பகுதியில், சமீபத்தில் மரங்களை அகற்றுவதற்காக புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இந்த நிலையில், இன்று காலை கருவேல மரங்களை வெட்டுவதற்காக தொழிலாளர்கள் கண்மாய்க்குள் சென்றபோது, வழித்தடத்தின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மோப்ப நாய் படை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலையாளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய ஆயுதம் மற்றும் பிற ஆதாரங்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.கொலை செய்யப்பட்ட இளைஞரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை.
உடலில் இருந்த காயங்களின் தன்மையைப் பார்த்தால், முன்கூட்டியே திட்டமிட்டு மிகக் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கண்மாயின் இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் வராத, அடர்ந்த கருவேல மரங்கள் சூழ்ந்த இடமாக இருப்பதால், சமீபத்தில் உருவாக்கப்பட்ட வழித்தடத்தை அறிந்தவர்களே அங்கு வந்து இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த இளைஞரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன், கொலைக்கான பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்த விசாரணை அடுத்த கட்டத்தை எட்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடையாளம் தெரியாத இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Danger waiting new path Youth hacked to death near Thiruppuvanam Who person whose body recovered