தீபாவளி வசூலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்! லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய 1.12 கோடி ரூபாய்!
lot of money was caught in the anti bribery department raid conducted across Tamil Nadu
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது!
தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அரசு அலுவலகங்களில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த சோதனையின் முடிவில் 1.12 கோடி ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் இருந்து கணக்கில் வராத 75 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக நாமக்கல் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட்ட 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகரில் மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனரிடம் இருந்து கணக்கில் வராத 6.68 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 4.26 லட்சம் ரூபாய் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பொது மேலாளர் அறையில் இருந்து 3.55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் ரைஸ் மில் அதிபரிடம் அனுமதி வழங்க லஞ்சமாக பெறப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போன்று ஓசூர் சோதனை சாவடியில் கணக்கில் வராத 2.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் 1.20 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக முழுவதும் வருவாய், போக்குவரத்து, வேளாண்மை, நகர ஊரமைப்பு, தீயணைப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தீபாவளி முன்னிட்டு அரசு அதிகாரிகள் லஞ்சமாக பெற்ற 1.12 கோடி ரூபாய் லஞ்ச பணம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் அதிரடியாக நடத்தப்பட்ட ஒருநாள் சோதனைக்கு 1.12 கோடி சிக்கி உள்ளது என்றால் ஆண்டு முழுவதும் அரசு அலுவலகங்களில் புழங்கும் லஞ்சப் பணத்தின் அளவு எவ்வளவு இருக்கும் என யூகிக்க முடியாத அளவில் உள்ளது. இதே போன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆண்டு முழுவதும் அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
lot of money was caught in the anti bribery department raid conducted across Tamil Nadu