குளியலறையில் மூதாட்டியை அடைத்துவிட்டு நகையுடன் தப்பியோட்டம்...! செல்போன் சிக்னல் மூலமாக சிக்கியது எப்படி...?
Locked old woman bathroom and escaped jewelry How he caught through cell phone signal
சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை குளியலறைக்கு அழைத்துச் சென்று, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்ததுடன், அவரை உள்ளே வைத்து கதவை பூட்டிவிட்டு தப்பிய பணிப்பெண்ணை காவலர்கள் ஒரு மணி நேரத்தில் மடக்கிப் பிடித்தனர்.
மடிப்பாக்கம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் (78). இவரது மனைவி நிர்மலா (74). வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நிர்மலாவை தனியாக கவனித்துக்கொள்வதில் சிரமம் இருந்ததால், அவருக்கு உதவுவதற்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா (44) என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

சுப்பிரமணியன் தம்பதியின் மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் நிர்மலாவும் சித்ராவும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது குளியலறையில் உள்ள குழாய் சரியாக மூடப்படவில்லை என்று சித்ரா தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய நிர்மலாவை குளியலறைக்கு அழைத்துச் சென்ற சித்ரா, அவர் குழாயைப் பார்ப்பதற்காக கீழே குனிந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது நிர்மலாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை சித்ரா பறித்துள்ளார்.
நகையை பறித்த பின்னர், நிர்மலாவை குளியலறைக்குள் வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டிய சித்ரா, அவரது செல்போனையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறியுள்ளார்.குளியலறைக்குள் சிக்கிய நிர்மலா, அதிர்ச்சியில் கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்கு வந்து, குளியலறை கதவைத் திறந்து நிர்மலாவை மீட்டனர்.பின்னர் இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சித்ராவின் செல்போன் கோபுரச் சமிக்ஞையை வைத்து அவர் சென்ற இடத்தைத் துரிதமாகக் கண்டறிந்தனர்.
இதையடுத்து மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த சித்ராவை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 10 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் செல்போன் மீட்கப்பட்டன.புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட காவலர்களுக்கு நிர்மலா நன்றி தெரிவித்தார்.
English Summary
Locked old woman bathroom and escaped jewelry How he caught through cell phone signal