தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடக்கம்...! 2,500-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்கள் உருவாகி சாதனை...!
7 new government nursing colleges open Tamil Nadu record more than 2500 additional seats created
தமிழகத்தில் செவிலியர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில், புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க ரூ.351 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.
இந்த 6 கல்லூரிகளுக்கான கட்டமைப்பு மற்றும் பிற செலவுகளுக்காக ரூ.270.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முழுத் தொகையும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியில் இருந்து ஏற்கப்படுகிறது.மேலும், புதிதாக உருவாக்கப்படும் 6 கல்லூரிகளிலும் தற்போது அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடவசதியை பயன்படுத்தி, மொத்தம் 600 மாணவர்களை நடப்பு கல்வியாண்டிலேயே சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 60 பி.எஸ்சி. செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 7-வது புதிய அரசு செவிலியர் கல்லூரியும் தொடங்கப்பட உள்ளது.இதுதவிர, ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன்படி, டி.ஜி.என்.எம். செவிலியர் படிப்பில் 1,290 இடங்களும், பி.எஸ்சி. செவிலியர் படிப்பில் 440 இடங்களும், எம்.எஸ்சி. செவிலியர் படிப்பில் 75 இடங்களும், பட்டப்படிப்புக்கு பிந்தைய பி.எஸ்சி. செவிலியர் படிப்பில் 120 இடங்களும் என மொத்தம் 2,585 கூடுதல் செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதேபோல், 12 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 2,788 இடங்களும், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன.இதன் மூலம் மருத்துவத் துறையில் தேவையான மனிதவளத்தை அதிகரிப்பதுடன், செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு கூடுதல் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
7 new government nursing colleges open Tamil Nadu record more than 2500 additional seats created