இவர்களே பிரச்னையை உருவாக்கிட்டு.. இவர்களே சரி செய்வார்களாம்! மேல்மா சிப்காட் நில எடுப்பு அரசாணையை வாபஸ் பெற்ற தவெக அரசு!
TVK government withdraws Melma SIPCOT land acquisition GO
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக தவெக தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு நில எடுப்புக்கான அறிவிக்கை வெளியானது அரசியல் வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டையின் 3-வது யூனிட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தற்போதைய தவெக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழக அரசிதழில் வெளியான அறிவிக்கையில், செய்யாறு தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக மேல்மா கிராமத்தில் 22.1600 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு சிப்காட் நிர்வாகத்தின் நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும், நிலம் தொடர்பான விவரங்களை திருவண்ணாமலை சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக தவெக குரல் கொடுத்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில், மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்மா பகுதியில் உள்ள 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் முயற்சிகளுக்கு தவெக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அப்போது தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மேல்மா கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். விவசாயிகளின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதே முதன்மை கடமை என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியானது விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியது. ஏற்கெனவே எதிர்த்த திட்டத்திலேயே தற்போது அரசு நில எடுப்பு அறிவிக்கையை வெளியிட்டது ஏன் என்ற விவாதமும் உருவானது.
இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்ட மேல்மா கிராமத்துக்கான சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல்மா பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனால், முதலில் நில எடுப்பு அறிவிக்கை வெளியிட்டு பின்னர் அதனை திரும்பப் பெற்றிருப்பது குறித்து அரசியல் வட்டாரங்களிலும் விவசாயிகள் மத்தியிலும் மீண்டும் விவாதம் உருவாகியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்த்த திட்டம் தொடர்பாக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கை வெளியிடப்பட்டதும், தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
TVK government withdraws Melma SIPCOT land acquisition GO