ஜனவரிக்குள் தவெக ஆட்சி முடிவுக்கு வரலாம்!ரூ.60 கோடி பேரம்? அதிமுக எம்எல்ஏக்களுக்கு தூண்டில் போடும் தவெக? ரெடியாக பாஜக!
The TVK government wonot last more than six months Rajakambiran sensational prediction
“தவெக அரசு 6 மாதங்களுக்கு மேல் தாங்காது என்றும், வரும் ஜனவரி மாதத்திற்குள் நீதிமன்ற வழக்குகளாலேயே ஆட்சியின் நிலைமை கேள்விக்குறியாகலாம் என்றும் தவெகவைச் சேர்ந்தவர்களே அஞ்சுகின்றனர்” என அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தவெக அரசின் செயல்பாடுகள், அதன் கூட்டணி அரசியல் மற்றும் எதிர்கால நிலை குறித்து ராஜகம்பீரன் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேட்டியில், தவெக ஆட்சியைத் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும், அதற்காக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், அதிமுக எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும், இதற்காக ராஜினாமா செய்யக்கூடிய எம்எல்ஏக்களுக்கு முதற்கட்டமாக ரூ.25 கோடியும், தேர்தல் செலவுகளுக்காக ரூ.35 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுவதாகவும் தெரிவித்தார். எனினும், இந்த தொகைகள் தொடர்பான தனது கூற்றுக்கு அவர் ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
தொடர்ந்து, தவெக கொள்கை அரசியலைவிட குதிரை பேர அரசியலையே நம்பி செயல்படுவதாக ராஜகம்பீரன் விமர்சித்தார். மேலும், மதச்சார்பற்ற, சமூகநீதி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதிலும் தவெக தயக்கம் காட்டுவதாகவும், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் வலியுறுத்திய பிறகே இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
பெரியார் பிறந்தநாள் பேரணி மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட போலீஸ் நடவடிக்கைகளையும் அவர் விமர்சித்தார். இத்தகைய நடவடிக்கைகள் பாஜகவின் திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெறுவதாக தான் கருதுவதாக ராஜகம்பீரன் தெரிவித்தார். இதன் மூலம் தவெக அரசு மறைமுகமாக பாஜகவின் நிழல் அதிகாரத்தில் இயங்கும் அரசு என்பது விரைவில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்ற மனநிலையிலேயே தவெக செயல்படுவதாகவும் ராஜகம்பீரன் கூறினார். பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற நிலைப்பாட்டை தவெக மறைமுகமாக வெளிப்படுத்தி வருவதாகவும், இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக அரசு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்தும் தனது கணிப்பை வெளியிட்ட ராஜகம்பீரன், இடைத்தேர்தல்கள் மற்றும் எம்எல்ஏக்களை அணிதிரட்டுவதன் மூலம் ஆட்சியைத் தொடர்ந்து நடத்த முயற்சிக்கலாம் என்றார். அதே நேரத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அரசியல் கணக்கீட்டின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த ஆட்சி நீடிக்க அனுமதிக்கப்படலாம் என்ற கருத்தும் இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், வரும் ஜனவரி மாதத்திற்குள் நீதிமன்ற வழக்குகளால் ஆட்சியின் நிலைமை கேள்விக்குறியாகலாம் என்றும் அவர் கூறினார்.
திருமாவளவன், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட தலைவர்கள் எவ்வளவு ஆதரவு அளித்தாலும், தவெக அரசு மறைமுகமாக பாஜகவின் செல்வாக்கில் இயங்குகிறது என்ற தனது விமர்சனத்தை ராஜகம்பீரன் மீண்டும் முன்வைத்தார். விஜய் தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டதாக கூறினாலும், அவரது ஆட்சி நிர்வாகமும் அரசியல் செயல்பாடுகளும் பெரியார் வழியில் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியின் வழியில் செல்வதாகவும் அவர் விமர்சித்தார்.
சட்டப்பேரவையில் முக்கியமான பிரச்சனைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்படாமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும் ராஜகம்பீரன் குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட அளவு நிலம் வைத்திருப்பவர்கள்கூட பல்கலைக்கழகம் தொடங்கும் வகையில் விதிகள் அமைந்தால், கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு தனியாரிடம் அதிகமாகச் செல்லும் என்றும், பாடத்திட்டம் மற்றும் கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்றும் அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார்.
தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்திட்டம் என்றும், தற்போதைய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ராஜகம்பீரன் குற்றம்சாட்டினார்.
மேலும், “கடவுள் மறுப்பைத் தவிர பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டேன்” என்று விஜய் கூறியிருப்பதையும் ராஜகம்பீரன் விமர்சித்தார். பெரியார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் ஒரே நாளில் வருவதை குறிப்பிட்டு, விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அவர் கிண்டலாகவும் கருத்து தெரிவித்தார்.
ராஜகம்பீரன் பேசிய இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தவெக அரசின் எதிர்காலம், அதன் கூட்டணி நிலைப்பாடு, அதிமுக எம்எல்ஏக்களை அணுகும் முயற்சிகள் மற்றும் பாஜகவுடனான உறவு குறித்த அவரது விமர்சனங்கள் கவனம் பெற்றுள்ளன.
English Summary
The TVK government wonot last more than six months Rajakambiran sensational prediction