விஜயிடமிருந்து விஜய் சேதுபதிக்கு சென்ற ஃபோன்!மனம் திறந்த விஜய் சேதுபதி!
A call from Vijay to Vijay Sethupathi Vijay Sethupathi opens up
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஹீரோ மட்டுமின்றி வில்லன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடம் தனி இடத்தைப் பெற்றுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘பத்தா’ படத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் போட்டியாளர் ஷாத்திகாவிடம் பேசும்போது தலைமைத்துவம் தொடர்பாக அவர் தெரிவித்த சில கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின. அந்தப் பேச்சில் விஜய்யின் பெயரை அவர் குறிப்பிடாத நிலையிலும், சிலர் அது விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக சில விமர்சனங்களும் எழுந்தன. அதே நேரத்தில் சீமான், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் அவருக்கு ஆதரவான கருத்துகள் அதிகம் பதிவாகின.
இந்த விவகாரம் அதிக கவனம் பெற்ற நிலையில், நிகழ்ச்சியில் பேசப்படும் கருத்துகளை வெளியில் உள்ள நபர்கள் அல்லது சம்பவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம் என விஜய் டிவி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “சஞ்சய்யின் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொல்லியிருந்தேன். உடனே விஜய் எனக்கு ஃபோன் செய்து, ‘நண்பா ரொம்ப நன்றி. அவன் ரொம்ப சந்தோஷமாக இருந்தான்’ என்று சொன்னார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து ஜேசன் சஞ்சய்யிடம் தான் கூறியதாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் விஜய் சேதுபதி பகிர்ந்து கொண்டார். “நான் ஜேசனிடமே, ‘டேய், என்னடா உங்க வீட்டில் நீ எவ்வளவு பெரிய ஆளை வெச்சிருக்க!’ என்று கேட்டேன். அவன் ரொம்ப தங்கமான பையன். அவன் இயக்கியிருக்கும் படமும் வரப்போகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றது குறித்தும் விஜய் சேதுபதி பேசினார். “ஷூட்டிங்கின்போது செட்டுக்கு போயிருந்தேன். என்னுடன் இருந்த ரோஹன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தான். அவனைப் பார்க்கத்தான் போயிருந்தேன். அதற்கு பிறகு ரோஹனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு, ‘நான் கொடுத்தேன் என்று சொல்’ என ஜேசன் சொல்லியிருக்கிறார்” என்று அவர் கூறினார்.
அக்டோபர் 2-ம் தேதி ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 1-ம் தேதி விஜய் சேதுபதியின் ‘பத்தா’ வெளியாகிறது. இதனால் இரு படங்களின் வெளியீடும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ள நிலையில், விஜய் சேதுபதி ஜேசன் சஞ்சய் மற்றும் விஜய் குறித்து பேசிய இந்தப் பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
English Summary
A call from Vijay to Vijay Sethupathi Vijay Sethupathi opens up