“பொறுப்பில்லாமல் நடந்துவிட்டு இப்போது ‘தம்பி’ என்கிறார்!” பதவிக்காக பொய்யாக கொட்டும் வன்னி அரசு.! விளாசிய கோவி.செழியன்! - Seithipunal
Seithipunal


மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசுவின் கருத்துக்கு முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிதாசன் விவகாரத்தில் வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டுவிட்டு தற்போது அந்த மாணவரை ‘தம்பி’ என அழைத்து வருவதாக கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி வழங்குவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிதாசனுக்கு நிதி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து அவரது முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரை படிக்க வைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னியரசு, “அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த முறை ஏன் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கோவி.செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாணவன் பாரதிதாசனை வஞ்சித்துவிட்டு, ஆதாரங்கள் எல்லாம் அள்ளிப் போட்ட பிறகு, பழிசொல்லை தவிர்க்க வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் வன்னியரசு” என்று கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.

மேலும், “பாரதிதாசனுக்கு நிதியை வழங்க முடியாது என்றால், திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து மாணவரின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரைப் படிக்க வைப்போம் என எங்கள் தலைவர் சொன்ன பிறகுதானே ‘நிதி வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிடுகிறீர்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை, எளிய பட்டியல் சமூக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம்தான் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் என்றும் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22ஆம் ஆண்டில் ரூ.5.31 கோடியாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் ரூ.84.87 கோடியாக உயர்த்தப்பட்டதாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை 2021-22ஆம் ஆண்டில் 9 ஆக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த முறை ஏன் எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பும் வன்னியரசு இந்தப் புள்ளிவிவரங்களை தெரிந்துகொண்டு பேச வேண்டும். நிதி தரவில்லை என்றால் எப்படி நிதி ஒதுக்கீடு உயர்ந்தது? பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வாறு அதிகரித்தது?” என்றும் கோவி.செழியன் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பதவிக்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்களாக கூறுவதை அமைச்சர் வன்னியரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் எந்தத் தொய்வும் இல்லாமல் செயல்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போதைய தவெக ஆட்சியில் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர் பொதுவெளியில் தனது பிரச்னையை தெரிவித்ததால் அவருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் மூலம் அந்த மாணவர் விமர்சிக்கப்பட்டதாகவும் கோவி.செழியன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு விட்டு, இப்போது பாரதிதாசனை ‘தம்பி’ என்று உருகுகிறார்” என்று கோவி.செழியன் விமர்சித்துள்ளார்.

மேலும், “இது கூட அந்த மாணவன் சிந்திய கண்ணீரும், எங்கள் தலைவர் ‘செலவை ஏற்று படிக்க வைப்போம்’ என சொன்ன பிறகுதானே நடக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தரப்பின் மீதான விமர்சனங்களை திசைதிருப்புவதற்காக அரசு பொய்யான தகவல்களை முன்வைப்பதாகவும், அதற்கு அமைச்சர் வன்னியரசு துணை போவதாகவும் கோவி.செழியன் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He acted irresponsibly yet now he calls me Thambi Vanni Arasu spouts lies for the sake of a post Covi Sezhiyan slams him


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->