கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
Kallakurichi Two youths died electrocuted
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சோகமான மின் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
அண்ணாநகரில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையம் ஒன்றில், கரீம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ஷாகில் (17) வாகனங்களைக் கழுவும் பணியில் ஈடுபட்டிருந்தார். சனிக்கிழமை இரவு, தென்கீரனூரைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் அரவிந்த் (27) என்பவர் தனது காரை கழுவுவதற்காக அங்கு சென்றார்.
பணி முடிந்த நிலையில், ஷாகில் மோட்டார் சுவிட்சை நிறுத்த முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக் கண்ட அரவிந்த், மின்சாரம் தாக்கிய ஷாகிலைக் காப்பாற்ற விரைந்தபோது, எதிர்பாராத விதமாக அரவிந்த் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தத் துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kallakurichi Two youths died electrocuted