#ஈரோடு_கிழக்கு:: செருப்பு மாலையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்..!!
Independent candidate filed nomination with sandal garland
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று 4 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதான அரசியல் கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சில சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்று வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.
இதுகுறித்து பேசிய நூர் முகமது "நான் இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம், வார்டு கவுன்சிலர் என 40 முறை தேர்தலில் நின்று உள்ளேன். தற்பொழுது 41வது முறையாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
நான் மக்களுக்கு நாயாக உழைத்து அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்தும் வகையில் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். பொதுமக்கள் உண்மையில் தங்களுக்காக யார் உழைப்பார்கள் என்று தெரிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்கக் கூடாது" என பேசியுள்ளார்.
English Summary
Independent candidate filed nomination with sandal garland