குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற இரக்கமற்ற தந்தை..திருச்சியில் நடந்த அதிர்ச்சி!
Heartless father sells child for Rs 50,000 shocking incident in Tiruchirappalli
திருச்சியில் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு , 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி சித்தாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். ரவிக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு, தனது மகளைஉறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்க வைத்ததாகவும், பின்னர் சமாதானமடைந்து, தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்த ரவிக்குமார், குழந்தையுடன் சென்ற அவர் வீட்டிற்கு பல நாட்கள் ஆகியும் குழந்தையை அழைத்து வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி, அப்பகுதியை சேர்ந்த பூக்கடை சாகுலிடம் சென்று தனது குழந்தை பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் ‘உங்களது குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுக்கும்படியும் உங்களது கணவர் ரவிக்குமார் கூறியதால், அந்த குழந்தையை ஒருவருக்கு தத்து கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமாரின் மனைவி, இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டபோது, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த முருகன்-சண்முகவள்ளி தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால், அவர்கள் ரவிக்குமாரின் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு சாகுல் விற்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் முருகன்-சண்முகவள்ளி தம்பதி, அந்த குழந்தையை நன்கு பராமரித்து வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு, தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்கு விற்ற பூக்கடை சாகுல், ரவிக்குமார் மற்றும் முருகன், சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Heartless father sells child for Rs 50,000 shocking incident in Tiruchirappalli