காப்பாற்றத் துடித்த வனத்துறை... தோற்றுப்போன போராட்டம்...! அணை பகுதியில் மயங்கிக் கிடந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்...!
forest department tried to save it but struggle failed baby elephant lying unconscious dam area died tragic death without any treatment
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட மூன்று வயது ஆண் குட்டி யானை, பல மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் உடலில் காணப்பட்ட காயங்கள் வேறு வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு விடை காணும் வகையில் உடற்கூறு ஆய்வு அறிக்கையை அதிகாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடலில் பலத்த காயங்களுடன் மயக்கநிலையில் கிடந்த சுமார் மூன்று வயது ஆண் குட்டி யானையை கண்டுபிடித்தனர். உடனடியாக அதன் நிலை குறித்து உயர் அதிகாரிகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குட்டி யானையின் உடலில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளித்து தேவையான மருந்துகளை வழங்கினார். தொடர்ந்து மருத்துவக் குழுவும் வனத்துறையினரும் இணைந்து அதன் உடல்நிலையை இடையறாது கண்காணித்து வந்தனர்.
குட்டி யானை விரைவில் குணமடைந்து மீண்டும் வனத்திற்குள் செல்லும் என்ற நம்பிக்கை நிலவிய நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தது. இந்த சம்பவம் வனத்துறையினரையும் விலங்குகள் ஆர்வலர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குட்டி யானையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடலில் காணப்பட்ட காயங்கள் மற்ற வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியான பிறகே உறுதியாக தெரியவரும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, குட்டி யானையின் முகப்பகுதியில் இருந்த சுமார் ஒரு அடி நீளமுள்ள இரண்டு தந்தங்களும் விதிமுறைகளின்படி பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
பின்னர் வனத்துறையினர் முன்னிலையில் குட்டி யானையின் உடல் வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.குட்டி யானையின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
forest department tried to save it but struggle failed baby elephant lying unconscious dam area died tragic death without any treatment