கண்ணீரில் மூழ்கிய குடும்பம்... நடுத்தெருவில் நின்ற பிஞ்சுகள்...! தன் மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை... 3 குழந்தைகள் பரிதவிப்பு...!
family tears Children standing middle street worker commits suicide grief over death his wife 3 children mourning
தூத்துக்குடி கயத்தாறு அருகே மனைவியை இழந்த துயரத்தில் மனவேதனையுடன் வாழ்ந்து வந்த கட்டிடத் தொழிலாளி, வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நாளில் தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் மூன்று சிறு குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருவது அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.கயத்தாறு அருகேயுள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (37), கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி செல்லத்தாய் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு கார்த்திகா, சுமித்ரா என்ற இரண்டு மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர்.மனைவியின் மறைவுக்குப் பிறகு, கருப்பசாமி தனது மூன்று குழந்தைகளையும் வயதான தாயார் தங்கமாரியம்மாளையும் உடன் வைத்து வாழ்ந்து வந்தார்.
மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் கடந்த சில மாதங்களாக ஆழ்ந்த மனவேதனையில் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.இந்தச் சம்பவத்தன்று காலையில் குழந்தைகளுடன் தேநீர் அருந்திய கருப்பசாமி, வழக்கம்போல் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது தாயார் வயல்வெளி பணிக்காக வெளியே சென்ற நிலையில், சிறிது நேரத்தில் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேறினர்.
வீட்டில் தனியாக இருந்த கருப்பசாமி, அந்த நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய குழந்தைகள், வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு கதறி அழுதனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று கருப்பசாமியை கீழே இறக்கினர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.இதுகுறித்த தகவலின் பேரில் கயத்தாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாய், தந்தை இருவரையும் அடுத்தடுத்து இழந்த மூன்று குழந்தைகளின் பரிதாப நிலை அப்பகுதி மக்களின் மனதை உருகச் செய்துள்ளது. இந்த துயர சம்பவம் ஆசூர் கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
family tears Children standing middle street worker commits suicide grief over death his wife 3 children mourning