"D56 அப்டேட் இப்போதைக்கு இல்லை!" என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்! இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன் டாக்!
No update on D56 for now That all I can manage Director Thamilarasan Pachamuthu speaks candidly
நடிகர் தனுஷின் 56-வது திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அளித்துள்ள பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 28-ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளில் படத்தின் அப்டேட் வெளியாகுமா என்ற ரசிகரின் கேள்விக்கு அவர் அளித்த நகைச்சுவையான பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனுஷ் தற்போது தனது 55-வது திரைப்படமான 'ஓம்' படத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான 'அமரன்' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்ததால், 'ஓம்' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் தனுஷின் 56-வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார். முதல் படத்திலேயே வெற்றியைப் பதிவு செய்த தமிழரசன், தனுஷுடன் இணைவது ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், சமூக வலைத்தளமான எக்ஸில் ரசிகர் ஒருவர், "தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி D56 அப்டேட் வருமா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழரசன், "வராது தம்பி. D55 ரிலீஸுக்குப் பிறகுதான் எதுவாக இருந்தாலும். வேண்டுமென்றால் அன்றைக்கு காஸ்ட்யூம் டிசைனர் யார் என்று அப்டேட் சொல்கிறேன். என் சக்திக்கு அவ்வளவுதான் முடியும்," என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இயக்குநரின் இந்த வெளிப்படையான பதில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், 'ஓம்' மற்றும் D56 படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். மேலும், கவிஞர் அறிவுமதி எழுதிய 'தமிழ் முருகன்' நூலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'தமிழ் முருகன்' திரைப்படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஏற்கனவே வெற்றிமாறன்–தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதால், 'தமிழ் முருகன்' திரைப்படமும் அதே வரிசையில் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
English Summary
No update on D56 for now That all I can manage Director Thamilarasan Pachamuthu speaks candidly