போயஸ் கார்டனில் குடியேற திட்டமிடுகிறாரா முதல்வர் விஜய்? 350 கோடிக்கு ஜெயலலிதாவின் இல்லத்தை வாங்க முடிவா? உண்மை என்ன?
Is Chief Minister Vijay planning to move into Poes Garden Has a decision been made to purchase Jayalalithaa residence for 350 crore What is the truth
தமிழக முதல்வர் விஜய், சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை வாங்க உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக சுமார் ரூ.350 கோடி மதிப்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவலுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து, விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்தே தினமும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். அவரது இல்லத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே சுமார் 17 கிலோமீட்டர் தூரம் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள், குறிப்பாக அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் குடியேறுவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அரசு இல்லங்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய இல்லங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தற்போது வேதா நிலையம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவலையும் சம்பந்தப்பட்ட எந்த தரப்பும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
போயஸ் கார்டனில் குடியேறும் சூழல் ஏற்பட்டால், அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்ல வேண்டிய தூரம் சுமார் 8 கிலோமீட்டராக குறையும். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
போயஸ் கார்டன் தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம், சசிகலாவின் இல்லம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்டோரின் இல்லங்களும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
இதற்கிடையில், முதல்வர் விஜய் வேதா நிலையத்தை வாங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. எனினும், அரசு தரப்பிலோ, விஜய் தரப்பிலோ அல்லது வேதா நிலையத்தின் உரிமை தொடர்புடைய தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், இந்த தகவல்கள் தற்போது உறுதிப்படுத்தப்படாதவையாகவே உள்ளன.
English Summary
Is Chief Minister Vijay planning to move into Poes Garden Has a decision been made to purchase Jayalalithaa residence for 350 crore What is the truth