குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையே அடக்குமுறையைக் கையாள்வதா...? - ஆவேசமான அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்
Is police which should be preventing crimes dealing repression TTV Dinakaran issued angry statement
மாணவர் தமிழ்ச்செல்வனின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரை காவலர்கள் கைது செய்திருப்பதாகவும், நீதி கேட்டு போராடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"சிவகங்கை இரட்டைக் கொலை மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் ஆகிய சம்பவங்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றங்களைத் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், நீதி கோரி குரல் எழுப்பியவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் இரு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களையும் காவலர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதேபோல், மதுரை மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரையும் காவலர்கள் கைது செய்து அடக்குமுறையை கையாண்டதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றங்களில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்புவதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களையும் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இவ்வாறு டிடிவி தினகரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Is police which should be preventing crimes dealing repression TTV Dinakaran issued angry statement