பச்சை வயல்கள் கருகும் கொடூரம்...! தொடர் மின்வெட்டால் காய்ந்து வரும் பயிர்கள்... தவிக்கும் விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்க்குமா அரசு...? - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு நீரை நம்பி முன்கூட்டியே குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், தற்போது கடுமையான மின்தடையால் பெரும் இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கதிர் பிடிக்கும் முக்கியமான வளர்ச்சி நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கியிருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

ஆழ்துளைக் கிணறு வசதி கொண்ட விவசாயிகள், இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே குறுவை சாகுபடியை தொடங்கினர். ஏப்ரல் மாதத்தில் நாற்று நடவு செய்யப்பட்ட வயல்களில் தற்போது நெற்கதிர்கள் வெளிவந்துள்ளன. மேலும், மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட பயிர்களும் கதிர் பிடிக்கும் முக்கியமான பருவத்தை எட்டியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள மரத்தகுடி பகுதியில் பல விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளனர். ஆனால், கடுமையான வெயிலும் வறண்ட காற்றும் காரணமாக வயல்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மின்தடையால் மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்களுக்கு தேவையான அளவில் நீர் பாய்ச்ச இயலாமல், நெற்பயிர்கள் வாடி கருகத் தொடங்கியுள்ளன. பல இடங்களில் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் வறண்டு, மண் வெடிப்புகள் தோன்றியிருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

மின்விநியோக பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதன் விளைவாக விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக நீர் திறக்க இயலாத சூழல் நிலவிவரும் நிலையில், மாற்று ஆதாரமாக இருந்த ஆழ்துளைக் கிணறு பாசனமும் மின்தடையால் செயலிழந்துள்ளதால், குறுவை சாகுபடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விளைச்சலை எதிர்பார்த்து பல மாதங்கள் உழைத்த விவசாயிகளின் கனவுகள் கதிர் தரும் தருணத்திலேயே கருகும் நிலை உருவாகியிருப்பது காவிரி டெல்டா பகுதிகளில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horror green fields burning Crops drying up continuous power cuts Will government listen voices struggling farmers


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->