தவெக அரசை நோக்கி அதிமுகவின் கண்டனக் குரல்..! போதைப்பொருள் ஒழிப்பு, பெண் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பங்கேற்க இ.பி.எஸ் அழைப்பு...!
AIADMK condemnation Tvk government EPS calls participation drug eradication and women safety issues beyond political differences
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தில் வருகிற ஜூலை 18-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியது, போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் அச்சத்துடனும், பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும், நிறைவேற்ற முடியாத பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், கடந்த ஆட்சியின் பாதையிலேயே பயணித்து வருவதாகவும், அதற்கு பல சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அண்மையில் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தின் சிறுகளப்பூர் பகுதியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் அரசு உரிய வேகத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கத்தை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.அதேபோல், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் அரசின் அலட்சியமான அணுகுமுறையையும், நிர்வாக மெத்தனத்தையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையை கண்டித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாக ஒழிக்கத் தவறியதற்கும், குதிரை பேர அரசியலை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டப்படும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணியளவில் புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மகளிர் அணிச் செயலாளரும், செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமை வகிக்கிறார். திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.என். சிவக்குமார் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிகழ்வில் லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பையும், பொதுமக்களின் நலனையும் வலியுறுத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK condemnation Tvk government EPS calls participation drug eradication and women safety issues beyond political differences