நியாயமான கோரிக்கை... அராஜகத் தாக்குதல்...! - மாணவிகளுக்காகக் குரல் கொடுத்த நயினார் நாகேந்திரன்...!
just demand anarchic attack Nayinar Nagendran who spoke up students
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தவெக அரசின் காவல்துறையினர் மேற்கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான தடியடி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நியாயமான கோரிக்கையை முன்வைத்து குரல் கொடுத்த பெண் குழந்தைகள் மீது பலம் பிரயோகிக்கப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்க செயல்.
ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்போம் என்று தேர்தல் மேடைகளில் உறுதியளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்தச் சம்பவத்திற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? பெண்களின் பாதுகாப்பு குறித்து கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் முழக்கங்களாகவே மாறிவிட்டன என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மது பழக்கத்தின் பாதிப்பிலிருந்து தங்களது கிராமத்தையும், எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது தவெக அரசு உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காயமடைந்த மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
just demand anarchic attack Nayinar Nagendran who spoke up students