உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற எ.வ.வேலு விவகாரம்...! லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிரடி மேல்முறையீடு...!
EV Velu case went Supreme Court swift appeal Supreme Court against ban look out notices
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல கோடி ரூபாய் சாலைத் திட்ட முறைகேடு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தைத் தொடர்ந்து தற்போது உச்சநீதிமன்றத்திலும் முக்கிய சட்டப்போராட்டமாக மாறியுள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த 'லுக் அவுட்' அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், தேடப்படும் நபராக அறிவித்து 'லுக் அவுட்' அறிவிப்பும் வெளியிடப்பட்டது.இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கையும், 'லுக் அவுட்' அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன் மற்றும் சித்தார்த் லுத்ரா, "அரசின் முன் அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை.
அரசுக்கு எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை. விதிமீறல்கள் தொடர்பாக அதிகாரிகள் மீது ஏற்கனவே துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், வழக்கும் 'லுக் அவுட்' அறிவிப்பும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்று வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், "எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது, 2022-ஆம் ஆண்டில் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே ஒப்பந்ததாரர்களுக்கு 77 சதவீத தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 85 பணிகளுக்காக சுமார் 195 கோடி ரூபாய் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சாலைகளுக்கு இதுவரை தரச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, ஆளுநரின் முன் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தை இந்த வழக்கில் முன்வைக்க முடியாது" என்று வாதிட்டார்.
இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, எ.வ.வேலு வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பிறகு ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதேசமயம், அவருக்கு எதிராக வெளியிடப்பட்டிருந்த 'லுக் அவுட்' அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், அடுத்த விசாரணை நடைபெறும் ஜூலை 28-ஆம் தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
எனினும், அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை மறுநாள் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்ததாக நீதிமன்ற வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
EV Velu case went Supreme Court swift appeal Supreme Court against ban look out notices