கருவில் உள்ள குழந்தை ஆணா..? பெண்ணா..? கருவி மூலம் கண்டறிந்து பணம் பறித்த போலி டாக்டர்கள்: கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது..!
Fake doctors arrested in Kallakurichi for extorting money by using a device to determine whether the fetus was male or female
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து , கிராமத்தில் உள்ள பெண்களிடம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம் கண்டறிந்து அவர்களிடம் பணம் பறித்து வந்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சியில் உள்ள உறவினர்கள் மூலம் பெங்களூரில் இருந்து ஒரு கர்ப்பிணி தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய செம்பாக்குறிச்சிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து, சேலம் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் செம்பாக்குறிச்சிக்கு சென்றுள்ளனர். அதன்படி, அங்குள்ள ஒரு வீட்டில் 02 வாலிபர்கள் 02 பேருக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் மருத்துவம் பார்த்த 02 போலி மருத்துவர்களை பிடித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார், கருவில் உள்ள குழந்தை ஆணா..? பெண்ணா..? என்பதை கண்டறியும் கருவி, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து 02 வாலிபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்த இளையராஜா (36), கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (36) என்பது தெரியவந்துள்ளது. இதில் இளையராஜா நிற்பவர் 12-ஆம் வகுப்புவரை படித்துள்ளதாகவும் மணிவண்ணன் பிஎஸ்சி படித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் வேலை கிடைக்காததால் இந்த தொழில் செய்ததாகவும் தெரிவித்த நிலையில், இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fake doctors arrested in Kallakurichi for extorting money by using a device to determine whether the fetus was male or female