இப்படி போனா காடுகள் முற்றிலும் அழிந்துவிடும் - கடும் கண்டனத்துடன் உச்சநீதிமன்றம் சொன்ன செய்தி!
SC Case about forest flood climate change
சமீபத்திய கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் வடமாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்த பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த விசாரணையில், சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், இது தொடர்ந்தால் காடுகள் முற்றிலும் அழியும் என்ற கவலை தெரிவித்தது.
கடந்த வெள்ளப்பெருக்கில் இமாச்சலப் பிரதேசத்தில் மிதந்த மரக்கட்டைகள் தொடர்பான ஊடகச் செய்திகள் எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில், பெரும்பாலானவை சட்டவிரோதமாக வெட்டப்பட்டு பதுக்கப்பட்ட மரங்கள் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டது. இதனால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு மற்றும் இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் அரசுகள் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி, “வெள்ளத்தில் இவ்வளவு அளவுக்கு மரங்கள் மிதப்பது, சட்டவிரோத வெட்டலின் விளைவு என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. இப்படியே தொடர்ந்தால் காடுகள் இல்லாமலாகும்” என்று எச்சரித்தார்.
மேலும், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு காரணங்களை அறிய வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
English Summary
SC Case about forest flood climate change