தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை வைத்த மருத்துவர் இராமதாஸ்... ஏழைகளின் வாழ்க்கையில் இன்பம் மலருமா?.! - Seithipunal
Seithipunal


மருத்துவக் கல்வி பயில இருக்கும் அரசு மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப் படும் அளவுக்கு அதிகமான கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதனால் கைக்கு எட்டிய மருத்துவக் கல்வி வாய்க்கு எட்டாதோ என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், அரசு பள்ளிகளில் படித்து வரும் கிராமப்புற ஏழை மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு இட ஒதுக்கீடு நனவாகியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டின் பயனாக, 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 மாணவர்கள், 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 இடங்கள் என மொத்தம் 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. அதேபோல், பல் மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை 2 அரசு கல்லூரிகளில் 12 மாணவர்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்கள் என மொத்தம் 92 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தால் ஒட்டுமொத்தமாக 405 பேர் பயனடைந்துள்ளனர். நீட் தேர்வுக்கு முன் அரசு மாணவர்களுக்கு சராசரியாக 40 இடங்கள் மட்டும் தான் இடம் கிடைத்து வந்தது. இப்போது அதைவிட 10 மடங்கு இடங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் 7.5% இட ஒதுக்கீட்டு மிகச்சிறந்த சமூகநீதி நடவடிக்கை.

ஆனால், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தும் அதில் பல மாணவர்களால் சேர முடியவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.11,000 மட்டும் தான். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இது தடையாக இருக்காது. ஆனால், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 3.85 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் வசூலிக்கப் படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரி என்றாலும் கூட, அங்கு தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் காட்டிலும்  அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் தான். இவை தவிர ரூ. 3 லட்சம் வரை மறைமுகக் கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன.

தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் செலுத்த வேண்டிய விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அரசு பள்ளிகளில் படித்த ஏழை - கிராமப்புற மாணவர்களால் இந்த அளவு கட்டணத்தை செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. கல்விக்கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை என்பதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளிகளின் மாணவர்கள் தங்கள் மருத்துவம் / பல்மருத்துவப் படிப்புகளை தொடங்க முடியாமலோ, தொடர முடியாமலோ போய்விடக்கூடாது. சமூகநீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாணவனுக்கு சராசரி கட்டணம் ரூ.4 லட்சம் எனும் நிலையில் 86 மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.3.44 கோடி செலவாகும். பல் மருத்துவப் படிப்புக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 80 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி செலுத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் பயிலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம்/பல் மருத்துவம் படிக்க ஆண்டுக்கு ரூ.5.44 கோடி செலவழிப்பதில் தவறில்லை. அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம். அத்துடன் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடு செய்து கொள்ளலாம். அதற்கு மாற்றாக, அவர்கள் அரசு மருத்துவ  மனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவாதத்தை எழுத்து மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, அரசு பள்ளிகளில் படித்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Request to Govt about Medical Students Govt School Studied Persons


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal