உலக புற்றுநோய் நாள் | புகையிலை, ஆலை வேதி கழிவுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
Dr Anbumani Ramadoss Say World Cencer Day 2023
உலக புற்றுநோய் நாள்: புகையிலை பயன்பாடு, வேதி ஆலைக் கழிவுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உலக புற்றுநோய் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்குவதும், புற்றுநோயிலிருந்து மீண்டு விட முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதும் தான் இந்த நாளின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பாதிக்கப்பட்டோர் மீது அக்கறை காட்ட வேண்டும்.

புற்றுநோய் பாதிப்புக்கு மருத்துவம் அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அகற்றுவது ஆகும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் நாட்டு மக்களை புற்றுநோயிடமிருந்து பாதுகாக்க முடியும்.
புகைப்பழக்கம் தான் புற்றுநோய் தாக்குவதற்கு முதன்மையான காரணம் ஆகும். பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இதுவே பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பதற்கான சிறந்த வழியாகும்.

வேதி ஆலைகளும், அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் தான் புற்றுநோயை ஏற்படுத்தும் சக்திகள். இந்தக் கழிவுகளால் தாய்ப்பாலில் கூட நச்சுப்பொருட்கள் கலந்துள்ளன. வேதி ஆலைகளின் கழிவுகள் பன்னாட்டு தரங்களுக்கு ஏற்ற வகையில் சுத்திகரிக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say World Cencer Day 2023