''வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம்'': கமல்ஹாசன் ..!
Kamal Haasan says arresting peoples representatives who fought for transparency is tantamount to stalling democracy itself
வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின் பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு தார்மீக நெருக்கடி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
நமது வாக்காளர் பட்டியல் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. யார் வேண்டுமானாலும் சரிபார்க்கும் வடிவத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிட ஏன் மறுக்க வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டும் தரவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளிலிருந்து தான் எடுக்கப்பட்டுள்ளன எனும் போது, அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியை ஆணையம் ஏன் கேட்கிறது? மஹாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் சந்தேகத்திற்கிடமான சேர்க்கைகள் அம்பலப்படுத்தப்படும்போது, பீஹாரில் இப்போது சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் பெயரில் (ஸ்பெஷல் இன்டென்ஸிவ் ரிவிஷன்) பெருமளவிலான நீக்கல்கள் ஏன் செய்யப்படுகின்றன.?

என்னுடைய சகோதரர் ராகுலும், இண்டி கூட்டணியின் எம்பிக்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், மக்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பி, ஜனநாயகத்தின் மக்கள் மன்றமான பார்லிமென்டில் இருந்து தேர்தல் ஆணையம் வரை அமைதியாக நடந்து சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.
வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகப் போராடிய மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்குச் சமம். விடுதலையடைந்த முதிர்ச்சியுற்ற குடியரசு நாட்டில் நடக்கக் கூடாத சம்பவம் இது.
வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும்போது, அது வெறும் ஒரு சிறிய அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் இதொரு தார்மீக நெருக்கடி.
வாக்குச் செலுத்திய வாக்காளர் பட்டியல்களை இயந்திரத்தால் வாசிக்க முடிகிற வடிவத்தில் வெளியிடுங்கள். அந்தப் பட்டியல்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரத்தின் வார்த்தைகளால் சொல்வதை விட, மக்களே உண்மையை நேரடியாகப் பார்க்கட்டும்.
இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. பாஜ கூட்டணியில் உள்ள சகோதரர்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளையும், வெளிப்படைத்தன்மைக்காக ஒன்றுபடுமாறு நான் அழைக்கிறேன். இந்தக் கோரிக்கையை, கிராமம் முதல் நகரம் வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் செல்வோம். இது நமது வாக்குகளைப் பாதுகாக்கவும், நம் குடியரசைப் பாதுகாக்கவும் நாம் செய்ய வேண்டிய செயலாகும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Kamal Haasan says arresting peoples representatives who fought for transparency is tantamount to stalling democracy itself