தமிழக அரசு முடிவெடுப்பதில் தாமதம் ஏன்? இப்படியா அலட்சியம் காட்டுவது.., அன்புமணி இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நேரடியாக பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுத்து அறிவிக்கப் படும் என்று உறுதியளித்து இன்றுடன் 25 நாட்களாகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. 80 ஆயிரத்திற்கும் கூடுதலான தகுதித்தேர்வு வெற்றியாளர்களின் எதிர்காலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்; பணி வழங்க வடிவமைக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு எதிரான நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை செய்ய வேண்டிய தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை திணித்தது. 

அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியராக முடியும். இந்த அநீதிக்கு எதிராக தகுதித் தேர்வில் வென்றவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; அவர்களுக்கு பா.ம.க. துணை நிற்கிறது.

ஆண்டுக்கு ஒரு போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த மே 9-ஆம் நாள்  முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். ஐந்தாவது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்த நிலையில், மே 13-ஆம் நாள் அரசின் சார்பில் அவர்களுடன் பேச்சு நடத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். 

அதன்பின் இன்றுடன்  25 நாட்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களாக அமர்த்துவது பற்றி அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் கேட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளைக் கூட தமிழக அரசு தொடங்கவில்லை.

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சட்ட சிக்கல் இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் தகுதித் தேர்வை ரத்து செய்வதில் தான் சட்ட சிக்கல்கள் உள்ளன; போட்டித்தேர்வை ரத்து செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 10ஆம் வகுப்பு வரையிலும் இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. 

அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், தகுதித் தேர்வை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்குப் பிறகும் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டிய தேவை தமிழக அரசுக்கு இல்லை. இது தொடர்பாக 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட  பள்ளிக்கல்வித் துறையின் 149-ஆம் எண் அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டாலே போதுமானது.

பள்ளிக்கல்வித்துறையில் அண்மைக்காலமாக சில சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் பொறுப்பை அகற்றி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவிக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான ஆணையை நேற்று பிறப்பித்திருக்கிறது. 

அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 5 மாதங்களில் எந்தப் பணிக்கும் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படாததை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதே போல், பள்ளிக்கல்வித்துறையில் கடந்த காலங்களில் நிகழ்ந்த அனைத்து தவறுகளும் திருத்தப்பட  வேண்டும்; அதில் தகுதித்தேர்வில் வென்றோருக்கு பணி வழங்குவது முதன்மையாக இருக்க வேண்டும்.

இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் அரசாணை 149-ஐ நீக்கி விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அத்துடன், ஏற்கனவே இருந்தவாறு ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் எம்பி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss say about TET exam passed Teachers issue june 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->