7,000 டன் நெல் மூட்டைகள் திருட்டு! காரணம் இவர்கள் தான் - அன்புமணி இராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!
Dr Anbumani Ramadoss Condemn to Dharmapuri Paddy Robbery
தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி? விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7,000 ரன் எடை கொண்ட நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும். அரசு கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நெல் மூட்டைகள் மாயமான கிடங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ளது. நெல் மூட்டைகளை காவல் காக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட நெல்லின் மதிப்பு முக்கியமல்ல. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அரசின் கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அரசின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

நெல் மூட்டைகள் மாயமானதற்கான முதன்மைக் காரணம் அரசு நெல் கிடங்கு திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்தது தான். திருட்டுக்கு மட்டுமின்றி, மழையால் நெல் மூட்டைகள் நனைந்து பாழாவதற்கும் இது தான் காரணம் ஆகும்.
இதைத் தடுப்பதற்காக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஒரே நேரத்தில் 5000 மூட்டைகளை அடுக்கி வைக்கும் அளவுக்கு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; ஒவ்வொரு வட்டத்திலும் வலிமையான, தேவையான அளவில் நெல் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்" என்றுஅன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Condemn to Dharmapuri Paddy Robbery