சிறுமி மீதான கொடூரம்! வாலிபருக்குத் தூக்கு...! - நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் பரபரப்பு...!
Cruelty girl Hang young man court dramatic decision creates stir
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 9 வயது சிறுமியின் கொடூர கொலை வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுவை நீதித்துறை வரலாற்றில் போக்சோ வழக்கில் முதன்முறையாக மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த 2024 மார்ச் 2-ந்தேதி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை காாவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து, அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியது. கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, உடல் வேஷ்டியில் சுற்றப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து கொலை, கடத்தல், சட்டவிரோத சிறைவு, சாட்சியங்களை அழித்தல், போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில், முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணா என்ற கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோரை காாவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் 16-ந்தேதி சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் 560 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை காாவலர்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30-ந்தேதி கருணா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் மற்றும் சிறுமி குடும்பத்தின் தரப்பு வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் விரிவான எழுத்துப்பூர்வ வாதங்களை முன்வைத்து, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை மூலம் குற்றவாளியின் குடும்ப பின்னணி மற்றும் முந்தைய வழக்குகள் தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுமதி, கருணாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அரசு நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும், கருணா பலத்த காாவலர் பாதுகாப்புடன் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
English Summary
Cruelty girl Hang young man court dramatic decision creates stir