புயல் மழையால் எந்த பிரச்னையும் இல்லை! வந்தாலும் சமாளித்துக்கொள்வோம் - முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
CM Stalin say about Cyclone chennai rain
வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் காரமணாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேரில் சென்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (30.11.2024) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருடனும் முதலமைச்சர் மழை விபரம், முகாம்கள் விபரம், தண்ணீர் வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து தக்க அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், "சென்னையில் இதுவரை மழைநீர் தேங்கவில்லை. கடந்தமுறை தேங்கிய இடங்களில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளோம். எனவே பிரச்னை வராது. அப்படியே வந்தாலும் சமாளிப்போம்" என்று தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
பொதுமக்கள் மிக அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கடற்கரை பகுதிகளுக்கு புயலை வேடிக்கை பார்க்க எக்காரணத்தை செல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
English Summary
CM Stalin say about Cyclone chennai rain