முன்னாள் எம்.எல்.ஏ மறைவு! வேதனையடைந்தேன் என முதல்வர் பழனிசாமி இரங்கல்!
CM Palanisamy Mourning To Ex MLA sundarrajan Demise
மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக சார்பில் போட்டியிட்டு மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த அவர் அக்கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தார். பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் தேமுதிக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணைந்த போது, அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த சுந்தர்ராஜன் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக மாறினார்.
அதனை அடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
அவரது மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்" என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

English Summary
CM Palanisamy Mourning To Ex MLA sundarrajan Demise