சென்னையில் டெலிவரி பாய் போல் திருட்டில் ஈடுபட்ட உ.பி., இளைஞர்கள் கைது!
Chennai up youngsters arrested
சென்னையில் டெலிவரி பாய் போல் நடித்து பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைதாப்பேட்டை புஜங்காரா வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகராஜன், கடந்த மாதம் 8ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
உடனடியாக அவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தனர். அதில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷாம் முகமது (35) மற்றும் நூர் இஸ்லாம் (32) எனத் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் சிறப்பு வலையோட்டத்தில் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் சென்னைக்கு வந்து சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, நகரின் பல்வேறு இடங்களில் டெலிவரி பாய் போல் சுற்றி, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக தெரியவந்தது. மேலும், ஷாம் முகமது மீது மட்டும் உத்திரப் பிரதேசத்தில் ஆறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Chennai up youngsters arrested