மது, சூதாட்டதால் கடனை தொல்லை: கோயில்களில் திருடிய 03 பேர் கைது: பல லட்சம் பொருட்கள் பறிமுதல்..!
03 people arrested for stealing from temples in Andhra Pradesh due to debt due to alcohol and gambling
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்கம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோயில்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி தங்கம், வெள்ளி நகைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை திருடு போயுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அந்த பகுதியுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, டிஎஸ்பி ரவிபாபு தலைமையிலான சிறப்பு குழுவினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். அதன்படி நேற்று கோர்லப்பள்ளி கிராஸ் பகுதியில் சிறப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 03 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் அனந்தபூரை சேர்ந்த மாரிசாமி (45), ராஜு (37), பனிவாசலு (49) என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்ந்து நடத்திய விசாரணையில், நண்பர்களான இவர்கள் 03 பேரும் கோயில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் மது மற்றும் சூதாட்ட பழக்கங்களுக்கு அடிமையான இவர்கள், பலரிடம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால், வாங்கிய கடனை நீண்ட நாட்களாக இவர்கள் திருப்பி தரவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் கடனை அடைக்க திருட்டு முயற்சியில் ஈடுபடுவது என திட்டமிட்டுள்ளனர். அதன்படி சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று கண்காணித்துள்ளனர்.
அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்களை இவர்கள் திருடி வந்துள்ளனர். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள சில வீடுகளிலும் நகை, பணத்தை திருடியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 03 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் வெள்ளியால் ஆன பொருட்கள், 44 கிராம் தங்க நகைகள், 20 கிலோ பித்தளை மணிகள் மற்றும் 05 கிலோ செம்பு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம் என கூறப்படுகிறது. தற்போது அவர்கள் வேறு எங்காவது திருடியுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
03 people arrested for stealing from temples in Andhra Pradesh due to debt due to alcohol and gambling