இரண்டு வருட ரத்தப்போருக்கு முடிவா?- கவிஞர் வைரமுத்துவின் உணர்ச்சி பொங்கும் பதிவு!
Will two year bloody war end Poet Vairamuthus emotional post
2023 அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் எல்லையை உடைத்து நுழைந்த ஹமாஸ் போராளிகள் பலரை பிணைக்கைதிகளாகக் கைப்பற்றிய சம்பவம், உலக அரசியல் வரைபடத்தை அதிரவைத்தது. அதன் பின்னர் தொடங்கிய இஸ்ரேல்-காசா போர், இரண்டு ஆண்டுகளாக தணியாத தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காசா இன்று சிதைந்த கனவுகளின் நகரமாக மாறியுள்ளது.

இந்நிலையில், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பு சாதகமான பதிலை வழங்கியுள்ளது. இதனால் உலக நாடுகளில் ஒரு புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.
இந்த அமைதியின் ஒளிக்கீற்றை பற்றிப் பேசும் வகையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.அதில்," 67 ஆயிரம் உயிர்களைக்
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்
பரிமாறிக்கொள்வதைப் போல
மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்
முதலில் பாலஸ்தீனத்திற்கு
உணவுப் பாதையைத்
திறந்துவிடுங்கள்
எலும்புக் கூடுகளுக்குள்
உயிர் ஊறட்டும்
கூடாரங்கள் மெல்ல மெல்லக்
குடில்களாகட்டும்
போர் விமானங்கள்
பறந்த வானில்
புறாக்கள் பறக்கட்டும்
சமாதானத்தை முன்னெடுத்த
அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஏற்றுக்கொண்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு
இருவருக்கும்
இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்
உலக நாடுகள் பல
ஒப்புக்கொண்ட வண்ணம்
பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்
"வெள்ளைப் பூக்கள்
உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி
அமைதிக்காக விடிகவே"என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது இணையத்தை வேகமாக சுற்றி வருகிறது.
English Summary
Will two year bloody war end Poet Vairamuthus emotional post