நடிகர் மோகன்லாலுக்கு கேரளா அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா.!!
kerala govt Appreciation Ceremony to actor mohanlal
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாஹேப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கடந்த 23 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் மோகன்லால் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக கேரள அரசு நடிகர் மோகன்லாலுக்கு பாராட்டு விழா நடத்தியது. 'லால்-சலாம்' என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மோகன்லாலுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பினராயி விஜயன், "மோகன்லாலுக்குக் கிடைத்த அங்கீகாரம் மலையாள சினிமாவுக்கும் கிடைத்த அங்கீகாரம். இது ஒவ்வொரு மலையாளியையும் பெருமைப்பட வைக்கிறது. இந்த விருது மலையாள சினிமாவின் கலை மதிப்பை தேசிய அளவில் நிலைநிறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த பாராட்டு விழாவில் ஓவியர் ஏ. ராமச்சந்திரன் வரைந்த ஓவியம் நடிகர் மோகன்லாலுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு மோகன்லாலின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
kerala govt Appreciation Ceremony to actor mohanlal