சிறுவன் தனியாக இருந்த நேரமே துயர நேரமாகி விட்டது! சேலைத் தொட்டில் விபத்தில் 13 வயது சிறுவன் பலி...!
boys time alone became time of tragedy 13 year old boy died saree cradle accident
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (41) ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி மீனா (38). தம்பதியருக்கு பவ்யஸ்ரீ (15) மற்றும் ஹரிஹரன் (13) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். பவ்யஸ்ரீ 10ஆம் வகுப்பிலும், ஹரிஹரன் 8ஆம் வகுப்பிலும் படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, மீனாவின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி, பிரசவத்திற்காக அவர்களது வீட்டில் தங்கியிருந்தார். அந்த காலத்தில் குழந்தை பயன்படுத்த வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் சேலையால் தொட்டில் கட்டப்பட்டது. நந்தினி திரும்பிச் சென்ற பின்னரும் அந்தத் தொட்டில் கழற்றப்படாமல் இருந்தது.

அதில் சிறுவன் ஹரிஹரன் விளையாடுவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிகழ்வுக்கு முன் மாலை, சதீஷ் தனது மகன் ஹரிஹரனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு மறுபடியும் வேலைக்குச் சென்றார். அதே நேரத்தில் மீனாவும், பவ்யஸ்ரீயும் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் ஹரிஹரன் மட்டும் இருந்தார்.
எப்போதும் போல, அவர் மாடி அறையில் உள்ள சேலைத் தொட்டிலில் ஏறி விளையாடினார். அப்போது தொட்டில் சிக்கித் திரும்பி, சேலை அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி மயக்கமடைந்தார்.சில நேரத்தில் வீடு திரும்பிய மீனா, மகன் தொட்டிலில் தொங்கிய நிலையில் அசைவின்றி இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஹரிஹரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துயரமான இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boys time alone became time of tragedy 13 year old boy died saree cradle accident