சென்னையை அதிரவைத்த பெண் மரணம்! புகைப்படத்தை வெளியிட்டு அண்ணாமலை விடுத்த கோரிக்கை!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Chennai Woman Death
பாஜக அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி.
மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் சகோதரி ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார்.
சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது பணிகள் நிறைவுபெறும் என்பது யாருக்குமே தெரியாது.
ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.
கடும் கோடைக் காலத்துக்குப் பின்னர், பெய்யும் மழைநீரை, பூமி உறிஞ்சிவிடும். ஆனால், நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளால்தான் தண்ணீர் தேங்கவில்லை என்று ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை? இந்த அழகில், சென்னை மழை குறித்து, ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் விசாரித்தார் என்று வெற்று விளம்பரம் வேறு.
உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Chennai Woman Death