ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு!
Armstrong murder case High Court sensational order
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்த வழக்கை காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், இது அரசியல் கொலை இல்லை என்றும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டதாகவும் வாதிட்டார்.
பின்னர், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சி.பி.ஐ. யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும். அது கிடைக்கப்பெற்று நாளில் இருந்து 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Armstrong murder case High Court sensational order