ஒரே நாளில் 20 லட்சம் புதிய பயனர்கள்; அரட்டை மொபைல் செயலி சாதனை..!
Arattai mobile app downloaded by 2 million new users in a single day
ஸோகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சுதேசி சமூக வலைதளமான 'அரட்டை' மொபைல் செயலியை நேற்று (செப்டம்பர் 30) ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் இணைந்துள்ளதாக அதனை உருவாக்கிய அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 வீத வரி விதித்துள்ளார். இதனையடுத்து அந்நாட்டை சேர்ந்த சமூக வலைதளங்களுக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இதனையடுத்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஸோகோ நிறுவனம் அறிமுகப்படுத்திய அரட்டை மொபைல் செயலி மீது மீண்டும் இந்தியர்களின் கவனம் திரும்பியுள்ளது. முதலில் தினமும் சராசரியாக சில ஆயிரம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துவந்தனர். தற்போது பயனர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானிஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'அரட்டை செயலியில் சில மேம்பாடுகளை செய்துள்ளோம். தயவு செய்து அதனை ப்ளேஸ்டோர் மூலம் அப்டேட் செய்யவும். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளோம். நேற்று ஒரே நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். உங்களின் அன்புக்கு நன்றி.' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Arattai mobile app downloaded by 2 million new users in a single day