#BREAKING || மலர்விழி ஐஏஎஸ் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு..!!
Anti corruption dept registers case against 3 persons including Malarvizhi IAS
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் மீது தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக 2 புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் மலர்விழி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மாவட்ட ஆட்சியராக தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய போது தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி ரசீது புத்தகங்கள் அச்சிட்டு கொள்முதல் செய்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இந்த ரசீது புத்தகங்கள் 40 முதல் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்ய வேண்டியதை தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கி 1.81 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்து ஊழல் நடைபெற்றதால் அரசுக்கு 1.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி தற்பொழுது அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றும் பொழுது கொரோனா காலக்கட்டத்தில் ப்ளீச்சிங் பவுடர் உட்பட தர்மபுரி மாவட்ட ஊராட்சிகளுக்கு தேவையான கிருமி நாசினிகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சில இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று இந்த கொள்முதல்களை ஒப்பந்த எடுத்த ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அரசு ஒப்பந்ததாரராக இருந்த தாகிர் உசேன், வீரையா பழனிவேல் ஆகியோர் வீடு உட்பட அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்பொழுது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீரையா பழனிவேல், தாகிர் உசேன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனைத்து இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் கொள்முதல் முறை கேட்டில் அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Anti corruption dept registers case against 3 persons including Malarvizhi IAS