அண்ணா பல்கலை. பெயர் மாற்றும் விவகாரம்.. மருத்துவர் இராமதாஸ் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்கான சட்டத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை சூட்டுவது நியாயம் அல்ல.

பொதுவாக பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஒருமைப் பல்கலைக் கழகங்களாக செயல்படுவது புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உலகின் புகழ்பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே ஒருமைப் பல்கலைக்கழகங்களாக இருப்பது தான் அவற்றின் வெற்றிக்கும், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் ஆகும். அந்த வகையில், புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகவும், இணைப்பு பல்கலைக் கழகமாகவும் திகழும் அண்ணா பல்கலைக்கழகம் ஒருமைப் பல்கலைக்கழகமாகவும், பிற பொறியியல் கல்லூரிகளை ஆளுமை செய்யும் இணைப்புப் பல்கலைக்கழகமாகவும் பிரிக்கப்படுவது முற்போக்கு நடவடிக்கை ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் இதைத் தெரிவித்திருந்தது.

ஆனால், பிரிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு பெயர் வைப்பதில் நடக்கும் குளறுபடிகள் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக ஒரு பல்கலைக்கழகம் பிரிக்கப்படும் போது, மூலப் பல்கலைக்கழகத்திற்கு அதன் பெயரை அப்படியே வைத்து விட்டு, பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிய பெயர் சூட்டுவது தான் வழக்கமாகும். ஆனால், இங்கு பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்து விட்டு, இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்புக்கு அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படவிருப்பது தான் கொந்தளிப்புக்கு காரணமாகும்.

கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 வளாகங்களை உள்ளடக்கிய கல்வி நிறுவனம் தான் இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் என்றால் இந்த 4 வளாகங்கள் தான் நினைவுக்கு வரும். இனியும் அவ்வளாகங்களை உள்ளடக்கிய கல்வி நிறுவனம் தான் அண்ணா பல்கலை. என்று அழைக்கப்பட வேண்டும்.

1978-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்த 4 வளாகங்களில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தான் குறிக்கும். அந்தக் கல்வி நிறுவனங்களில் கடந்த 32 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், வழங்கப்பட்ட தரமான கல்வி ஆகியவற்றின் பயனாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உலக அளவில் நல்ல பெயரும், ஏராளமான தரச்சான்றிதழ்களும் கிடைத்துள்ளன. அந்தப் பெருமைகள் அனைத்தும் அக்கல்வி நிறுவனங்களுக்குத் தான் சேர வேண்டும். மாறாக, புதிதாக உருவாக்கப்படும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயர் சூட்டப்பட்டால், உண்மையான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதன் ஆராய்ச்சியாலும், கல்வியாலும் கிடைத்த நற்பெயர்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் படும் தனியார் கல்லூரிகளுக்கு சென்று விடும். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாகும்.

1978-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் 2001-ஆம் ஆண்டு வரை ஒருமைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது. இனி வரும் நாட்களில் அவ்வாறு தான் செயல்படப் போகிறது. இடையில் அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் தான் தனியாக பிரிக்கப்பட்டு, புதிய பல்கலைக்கழகமாக உருவாக்கப்படுகின்றன. 2001-ஆம் ஆண்டு வரை இருந்த ஒருமைப் பல்கலைக்கழகம் அப்போது எப்படி அண்ணா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டதோ, அதேபெயரில் தான் இப்போதும் அழைக்கப்பட வேண்டும். அது தான் நீதியாகும். இதில் எந்த குழப்பங்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது.

ஒருமைப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படாவிட்டால், அந்த பல்கலைக்கழகம் பெற்ற பெருமைகள், பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாமல் போய்விடும்; கடந்த காலங்களில் மாணவ, மாணவியர்  பெற்ற சான்றிதழ்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே, ஒருமைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா இணைப்பு பல்கலைக்கழகம் Anna university (Affiliation))  என்று பெயர் சூட்ட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய  தமிழக அரசு முன்வர வேண்டும் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University Name Issue Dr Ramadoss got angry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->