24 மணி நேரத்தில் ரூ.1.26 கோடி வசூல்..! - தமிழகத்தில் பறக்கும் படைகளின் அதிரடி வேட்டையில் சிக்கும் ரொக்கப்பணம் ...!
1point26 Crore Seized 24 Hours Cash Intercepted During Raids by Flying Squads Tamil Nadu
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் இருந்த தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு, எம்.எல்.ஏ மற்றும் எம்.பி அலுவலகங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் 24 மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி ரொக்கப்பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாகத் திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.35 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் தனித்தனியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் பெரம்பலூர், நெல்லை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் லட்சக்கணக்கிலான பணம் சிக்கியுள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ள அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தேவையற்ற தொந்தரவு அளிக்க வேண்டாம் எனப் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், சென்னை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் துணை ராணுவப் படையினரின் உதவியுடன் விடிய விடிய வாகனத் தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
1point26 Crore Seized 24 Hours Cash Intercepted During Raids by Flying Squads Tamil Nadu