''அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகிறது''; சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார்..!
Law Minister Nirmal Kumar says that the appointments of government prosecutors are being made 100 percent honestly and fairly
அரசு வழக்கறிஞர் நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்று வருகிறதாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பேசும்போது சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் மேலும் கூறியதாவது;
தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர் பணியிடங்களுக்கு 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து ஆவணங்களும், தகுதிகளும் முறையாக சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு வழக்கறிஞர் நியமனம் தகுதி அடிப்படையில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுகிறதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர்களின் சரிபார்ப்பு மற்றும் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் முடிந்த பிறகே தற்போது அரசாணைகள் வெளியாகத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு எந்த நியமனமும் செய்யப்படவில்லை என்றும், அதேபோல் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படாமல் இருக்க, தற்போதைய அனைத்து நியமனங்களும் 06 மாதங்களுக்கு தற்காலிகமாகவே வழங்கப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்களின் செயல்பாடு, திறமை மற்றும் நீதிமன்றங்களில் அவர்கள் ஆற்றும் பணிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் இந்த முறையில் சுமார் 800 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த பணி நியமனங்களில் பணம் வாங்கியதாகவோ, அமைச்சர்கள் அல்லது பிறரின் பெயரைப் பயன்படுத்தி யாராவது மோசடியில் ஈடுபட்டாலோ, பொதுமக்கள் உடனே புகார் அளிக்கலாம். புகார் வந்தவுடன் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதாவது, சோழவரத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நாங்களே புகார் அளித்து, அவர் 02 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுதவிர தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் நடத்தி அரசு ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று முதல்வர் விஜய் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரத்தில், மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று எம்எல்ஏ நிதி மூலம் தேவையான வசதிகளை செய்து தருவது தவறல்ல என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஆளுநர் விவகாரம் குறித்து அரசின் நிலைப்பாடு ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநரின் அதிகாரங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி சில வரம்புகள் இருக்கின்றன என்றும், அவர் நேரில் சென்று ஆய்வு செய்வதால் எந்த நிர்வாகப் பலனும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முக்கியமாக முதல்வரின் கரூர் பயணத்தை தடுக்க திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறதாகவும், கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நாங்கள் மறக்கமாட்டோம். அவர்களுக்கு கட்சி சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டாலும், அதையும் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அந்த நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Law Minister Nirmal Kumar says that the appointments of government prosecutors are being made 100 percent honestly and fairly