நள்ளிரவில் பயங்கரம்.. தூத்துக்குடியில் வழக்கறிஞர் படுகொலை.!!
Advocate murder in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் 4வது தெருவில் வசித்து வரும் செந்தில் ஆறுமுகம் என்பவர் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் நிலையில் அந்தப் பகுதியில் மருந்தகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும் நடத்தி வருகிறார். செந்தில் ஆறுமுகம் வழக்கம்போல் நேற்று இரவு தனது மருந்தகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு சென்று உள்ளார்.
அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் செந்தில் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் படுகொலை செய்யப்பட்ட செந்தில் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செந்தில் ஆறுமுகத்திற்கும் அவரது தங்கை ப்ரீத்தியின் கணவரான கோபிநாதன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நள்ளிரவில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Advocate murder in Thoothukudi