ஜனநாயகன் vs பராசக்தி மோதலால் சூடேறும் கோலிவுட்! அந்த தகுதி எனக்கு இல்லை..சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
Kollywood is heating up with the Janyayan vs Parasakthi clash I donot have that qualification Sivakarthikeyan open talk
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், இந்தப் பொங்கல் திருவிழா கோலிவுட்டில் விஜய் vs சிவகார்த்திகேயன் என்ற நேரடி மோதலாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இப்போதே பரஸ்பர விமர்சனங்களையும் மோதல்களையும் தொடங்கியுள்ளனர்.
அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவிலிருந்து விலகவிருக்கிறார். இது தளபதியின் கடைசி படம் என சொல்லப்படுவதால், அவரது ரசிகர்கள் இந்த ரிலீஸை திருவிழாவாக கொண்டாட முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. முதல் சிங்கிளான “தளபதி கச்சேரி” பாடலில் மமிதா பைஜுவின் காஸ்ட்யூமை வைத்து ரசிகர்கள் ரீமேக் குறித்த விவாதங்களை கிளப்பினாலும், முழுமையான ரீமேக் அல்ல, இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஜனவரியில் திட்டமிடப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவதால், தேர்தல் காலத்தில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என விஜய் தரப்பு எதிர்பார்க்கிறது.
மற்றொரு பக்கம், பொங்கலுக்கு சோலோவாக வந்து வசூல் வேட்டை நடத்தலாம் என விஜய் ரசிகர்கள் கணக்கு போட்டிருந்த நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்கு முன்னேற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஒன்-லைன் ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த மாணவர்களை மையமாகக் கொண்டதாக இருப்பதால், சமூக ரீதியாகவும் ரசிகர்களிடமும் வலுவான கனெக்ஷன் ஏற்படும் என படக்குழு நம்புகிறது.
இந்த சூழலில், ஜனநாயகன்க்கு நேரடி போட்டியாக பராசக்தி வருவதால் விஜய் ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் தீவிரமடைந்துள்ளது. “கோட் படத்தில் துப்பாக்கி கொடுத்த விஜய்யையே எஸ்கே எதிர்க்கிறாரா?” என விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், இந்த போட்டியை திட்டமிட்டு ஏற்பாடு செய்ததே சிவகார்த்திகேயன் தரப்புதான் என்ற பேச்சுகளும் பரவி வருகின்றன.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு காக்கி சட்டை படம் வெளியான சமயத்தில் சிவகார்த்திகேயன் அளித்த ஒரு பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், “அஜித், விஜய் போன்ற பெரிய ஸ்டார்களுடன் போட்டி போடும் எண்ணமே எனக்கு இல்லை. அவர்களுடன் போட்டியிடும் தகுதியும் நம்பிக்கையும் எனக்கு இல்லை. எனக்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதி கிடைத்தால் போதும்” என்று கூறியிருந்தார்.
அந்த பேட்டியை தற்போது ரசிகர்கள் மீண்டும் பகிர்ந்து, இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைக் காட்டிலும், இந்த விஜய் vs சிவகார்த்திகேயன் மோதல் கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Kollywood is heating up with the Janyayan vs Parasakthi clash I donot have that qualification Sivakarthikeyan open talk