மருத்துவப் பயணம் மரணப் பாதையாக மாறியது…! அரசு பேருந்து–கார் மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!
Three members same family killed collision between government bus and car
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் குடும்பத்தில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்து, அப்பகுதியையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு வந்த சக்திவேலின் தாயார் பவுனு அம்மாள் (70) அவர்களை, விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, காரில் பவுனு அம்மாளுடன் சக்திவேலின் மனைவி கனகவல்லி (36), தம்பி கோவிந்தராஜ் (42), மாமனார் கலைவாணன் (60) ஆகியோர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில், விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.இந்த மோதலின் வேகத்தில், கார் பேருந்தின் முன்பகுதியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமடைந்தது. இந்த கோர விபத்தில், கனகவல்லி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காரில் இருந்த கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிந்தராஜ் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்துடன் மோதிய இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார், மருமகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Three members same family killed collision between government bus and car