''சமூக விரோதிகளின் கூடாரமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும்''; த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ள இபிஎஸ்..!
EPS urges Tvk government to renovate Koyambedu bus stand as a den of anti social elements
''சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர, த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்'' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''சென்னை மாநகரில் பாரிஸ் கார்னரில் இயங்கி வந்த பேருந்து நிலையம் மற்றும் மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய்த் திகழ்ந்த கொத்தவால்சாவடி ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடியைப் போக்கவும், கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பலனடையும் வகையில் சுமார் 35 ஏக்கரில் ரூ. 103 கோடி மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ஆம் ஆண்டு அதிமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகரின் காய்கறி மொத்த வியாபார வளாகமும் கோயம்பேட்டில் அமைக்கப்பட்டது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விரைவுப் பேருந்துகள், சென்னை மாநகருக்குள் வராமல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாலும், அங்கிருந்து சென்னை மாநகருக்குள் போதுமான அளவு மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பொதுமக்கள் பெரிதும் பலன் அடைந்தனர். மேலும், 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது. அதேபோல், ஆம்னி பேருந்துகளை இயக்கவும் கோயம்பேட்டில் தனியாக இடவசதி செய்து தரப்பட்டது.
இந்நிலையில், கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு மென்மேலும் வசதிகளை ஏற்படுத்தித் தர, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம் எனது தலைமையிலான கழக அரசால் வடிவமைக்கப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் நாளன்று அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை துவக்கி வைத்தேன்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தின்படி, தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்படுவது என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது என்றும், மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.

2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்தத் திட்டங்கள் அனைத்தையும் இனம் புரியாத ஒரு காரணத்திற்காக நாசப்படுத்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தை முழுவதுமாக முடக்கி, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்ததுடன், சென்னையில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தாத நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கச் செய்ததால் சென்னை மாநகர மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணா துன்பங்களுக்கு உள்ளாகினர்.
கோயம்பேடு பேருந்து நிலையம் தனது பொலிவை தொலைத்து செயலிழந்தது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்க்க திமுக அரசு முனைந்தபோது அதைக் கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டதுடன், பொதுவெளியிலும், பேட்டிகள் வாயிலாகவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தேன்.
அதன் விளைவாக, மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்புக்கு அஞ்சி அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் அன்றைய திமுக அரசு தவிர்த்தது. தங்களுடைய எண்ணம் நிறைவேறாத நிலையில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்பாரற்று சீர்குலைந்து, சீரழிந்துவிட்டது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக, இன்றைக்கு அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளன.

தற்போது, கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் மது அருந்துதல் மற்றும் தவறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் வசதியில்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் நடந்தது போலவே, தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை, வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி ஒரு திட்டம் இருந்தால் உடனடியாக அம்முயற்சியைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, அம்மா ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
EPS urges Tvk government to renovate Koyambedu bus stand as a den of anti social elements