ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் அதிமுகவிற்கு... முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
ADMK former minister RB Udhayakumar said Election 2026
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "திமுக அரசை எதிர்க்கும் அனைவரும் ஒன்றாக செயல்பட்டால்தான் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் சாத்தியமாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக, நாதக போன்ற கட்சிகளும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளன. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக இருந்தால், எதிர்ப்பு பலம் வீணாகிவிடும். இதனால்தான், அனுபவமும், மக்கள் நம்பிக்கையும் உள்ள எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் அழைப்பு விடுத்து வருகிறார் என்றார்.
திமுகவின் கூட்டணியில் கூடவே உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற கட்சிகளே பலவிதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். திமுகவிற்கு 80 சதவீதம் எதிர்ப்பு நிலை உள்ளது. இதனைச் சிதையாமல் வலுப்படுத்தவே ஒருமித்த அணியை எடப்பாடி முயற்சிக்கிறார்.
அன்வர்ராஜாவின் விலகல் குறித்து, "ஒருவரின் தனிப்பட்ட முடிவு கட்சிக்கு பாதிப்பு இல்லை. நாங்கள் புலி வேட்டைக்குச் செல்கிறோம், இடையில் ஓடும் எலிகளைக் கவனிக்க அவசியமில்லை" என்றார்.
ஓ.பி.எஸ் குறித்து அவர், "அவர் இணைவதற்கான காலம் கடந்துவிட்டது" என்றார். அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "நல்ல நோக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்" எனவும் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறுவதால் உண்மை வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சியில் பொதுமக்களின் பணத்தை அரசு சொத்தாக கருதி வினோதமாக செலவழிப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பதைக் கேட்க, "பொறுத்திருந்து பாருங்கள், எடப்பாடியின் குறி தப்பாது" என்றும், தேர்தல் ஆணையம், நீதிமன்ற வழக்குகள் போன்றவை தடையாக இருக்காது; ஆடி முடிந்து ஆவணி பிறக்கும்போது அதிமுகவிற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறினார்.
English Summary
ADMK former minister RB Udhayakumar said Election 2026